தனக்கெதிரான சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் வழக்கு

தனக்கெதிராக சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்வது தங்களது அரசியல் எஜமானர்களை திருப்திபடுத்துவதற்காகத்தான் என சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ள TRUEDOM EPC INDIA நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்றது. அந்த கடன் தொகையை TRUEDOM EPC INDIA நிறுவனம் சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதாகவும், இதன் மூலம் தங்களுக்கு 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் தான், அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2024 ம் ஆண்டு தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரும் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி மற்றும் என்.ஆர்.இளங்கோ கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை ஆபத்தானது எனவும் சட்டத்தை மீறியது எனவும் கூறினர். தங்களது அரசியல் எஜமானர்களை திருப்திபடுத்துவதற்காக அமலாக்கத் துறை இது போல செய்வதாகவும் கடுமையாக சாடினர். இதற்கு மறுப்பு தெரிவித்த அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் சட்டப்படியே தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.