முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் நாசர்..

 
  அமைச்சர் நாசர்.. 

பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டலினை சந்தித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தினார்.

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.7 ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தொடர்ந்து  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே ஆவின் பால் உற்பத்தி குறைந்து கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  ஆவின் பால் மற்றும் இதர பால் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்,  அதிக விலை கொடுத்து பொதுமக்கள் தனியார் பால் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம்  தெரிவித்திருந்தனர்.

ஸ்டாலின்.மு.க
 
இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர்,  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  இதில் ஆவின் பால் தட்டுப்பாடு புகார் உள்ளிட்ட பால்வளத்துறை சார்ந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சர் நாசர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன்  பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின்
 
முன்னதாக நேற்று, 2000 பால் கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தி விதிகளை மீறி,  கிட்டத்தட்ட 2,000 சங்கங்கள் பாலை  அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.  இதனையடுத்து அந்த சங்கங்களுக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில்,  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  மேலும் பால் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.