தமிழகத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை

 
Muthusamy

தமிழகத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தொடர்பான அதிரடி வேட்டை நடத்தப்பட்டு சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:  ஈரோட்டில் போதை மாத்திரை பயன்படுத்தி விற்றதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் போதை ஊசி, மாத்திரை பயன்படுத்துவது, கள்ளச்சாராயம் காய்ச்சும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழக முதல்-அமைச்சரும், டி.ஜி.பி.யும் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர். போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் யாருக்கும் துணையாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.