டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒரு போதும் முதலமைச்சர் வர விட மாட்டார்- அமைச்சர் மூர்த்தி
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒரு போதும் முதலமைச்சர் வர விட மாட்டார் என்றும், உரிமைக்காக பேரணி நடத்திய மக்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செவ்வாயன்று நடைபெற்ற டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு மாபெரும் பேரணியின் தொடர்ச்சியாக, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தடுப்பதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மேலூர் மக்களை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆட்சியர் சங்கீதா, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சந்தித்தனர். அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, கிடாரிபட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி ஆகிய ஊர் மக்களை சந்தித்து பேசுகையில், “தமிழ்நாட்டில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது. அப்படியே டங்ஸ்டன் திட்டம் வந்தால் என்னுடைய பதவியை கூட ராஜினாமா செய்வேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளோம். மேலூர் பகுதியில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வரவே வராது. வராத ஒரு திட்டத்திற்கு எதிராக மக்களை போராட சிலர் தூண்டி விட்டுள்ளனர். மறுவரையறை செய்வதாக தகவல் வந்துள்ளது. ஒரு சென்ட் நிலத்தை கூட அளக்க விட மாட்டோம். அப்படியே யாரேனும் வந்தால் முன்னால் நின்று திமுக போராடும். ஒரு காலத்திலும் டங்ஸ்டன் திட்டத்தை முதலமைச்சர் வர விட மாட்டார்" என கூறினார்.
அப்போது, பேரணியில் ஈடுபட்ட மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறவும், மேலூர் முல்லைப்பெரியாறு பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "மக்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொது சாலையில் நடந்து செல்ல காவல்துறை அனுமதி அளிக்காததால் தான் வழக்குப் பதியப்பட்டு உள்ளது. மக்கள் உரிமைக்காக தான் பேரணி சென்று போராடி இருக்கிறார்கள். எனவே மக்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது” என்றார்.
பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் மூர்த்தி, “திமுக ஆட்சியில் ஒரு போதும் டங்ஸ்டன் திட்டம் வராது. ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அதன் அடிப்படையில் மக்கள் பேரணி நடத்தி உள்ளார்கள். மக்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.