ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு முதல் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் - அமைச்சர் மூர்த்தி

 
Moorthi

ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.  இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து 2017 ஆம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி கே .எம் .ஜோசப் தலைமையிலாயின ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள்  அமர்வு விசாரித்து வந்தது. இவ்வழக்கு விசாரணையில் ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை எனவும் அனைத்து விதிமுறைகளும்,  சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதிட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி  வைத்தது. இந்த சூழலில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  ஜலிக்கட்டு போட்டியை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் திருப்தி அளிக்கிறது என்றும் ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று 5 நீதிபதிகள் கொண்ட  உச்சநீதிமன்ற அமர்வு அரசியல் சாசனம் தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:- ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு முதல் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இந்த வெற்றி தமிழர்களின் உணர்வுக்கும், பண்பாட்டு கலாச்சாரத்திற்கும் கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு  கூறினார்.