இதுவரை காலை பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்து விட்டார்கள்- மனோ தங்கராஜ்
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் SC,ST மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கி, இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவின் "சப் கா விகாஸ்" (அனைவரின் வளர்ச்சிக்காக) என்பதின் உண்மை முகம் இதுதான். இதுவரை காலைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்து விட்டார்கள். இந்திய நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான சம்மட்டி அடி இது.
பாஜகவின் "சப் கா விகாஸ்" (அனைவரின் வளர்ச்சிக்காக) என்பதின் உண்மை முகம் இதுதான்.
— Mano Thangaraj (@Manothangaraj) January 28, 2024
இதுவரை காலைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்து விட்டார்கள். இந்திய நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான… pic.twitter.com/PpP1eBDHuM
சமூகத்தில் நிலவும் சாதி மேலாதிக்கத்திற்கு சட்டபூர்வமாக அங்கீகாரமும், பாதுகாப்பும் வழங்குவதே பாஜகவின் ராம ராஜ்யத்தில் "அனைவருக்குமான வளர்ச்சி" என்று இதன் மூலம் பொருள் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே நாடு முழுக்க பல கல்லூரிகள் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை பொதுப்பிரிவினருக்கு தாரைவார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருக்கினறன. இந்த தவறான போக்கை சரிசெய்ய நாம் கோரிக்கை வைத்தால், பாஜகவோ அந்த தவறையே நிறுவமையப்படுத்துகிறது. ஒன்றிய அரசின் கீழ் உள்ள துறைகளில் இட ஒதுக்கீட்டில் வரும் பணியிடங்களில் பாதிக்கு பாதி நிரப்பப் படாமலேயே உள்ளன. அவற்றை எப்போது நிரப்புவீர்கள் என்று பலவருடங்களாக பாராளுமன்றத்தில் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம்.
நாம் எழுப்பும் கேள்விக்கு பாஜகவின் தீர்வு இது போன்ற அரியவகை "சப் கா விகாஸ்" ஆக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ஏற்றதாழ்வை போதிக்கும் ஆரிய சனாதான சாதீய பாகுபாடு பாஜக-விற்கு இவ்வாறே கற்றுக் கொடுத்து இருக்கிறது. இந்தியாவில் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் வஞ்சகம் செய்து அமர மக்களை அழித்து ஒழிக்கும் பாஜகவின் முயற்சியை சமத்துவம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்டஅனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.