HMPV வைரஸ் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 
masu

HMPV வைரஸ் பற்றி மக்கள் அச்சமோ பதற்றமோ கொள்ள வேண்டாம் என தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் HMPV என்ற வைரஸ் பரவி வருகிறது. HMPV வைரஸ் என்றால் human metapneumo virus என்பது பொருளாகும். அதாவது மனித மெட்டாப் நிமோ வைரஸ். இது கொரோனாவை போன்று மூச்சுக்குழலை பாதிக்கும் வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் என கூறப்படுகிறது. சீனாவின் வடக்கு பகுதியில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வைரஸ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருந்த போதிலும் இது சாதாரன வைரஸ் தான் எனவும், இது மழை மற்றும் குளிர்காலத்தில் வரக்கூடிய சாதாரண வைரஸ் காய்ச்சல் என சீனா உலக சுகாதார மையத்திடம் விளக்கம் அளித்துள்ளது. இதேபோல் சென்னை, பெங்களூரு  உட்பட இந்திய மாநிலங்களிலும்  இந்த வைரஸ் பரவியுள்ளது. 

இந்த நிலையில், HMPV வைரஸ் பற்றி மக்கள் அச்சமோ பதற்றமோ கொள்ள வேண்டாம் என தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, HMPV தொற்று வந்தால் தனிமையில் இருந்தாலே 3, 4 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இனி வரும் காலங்களில் வைரஸ்களுடன்தான் வாழ வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால் இந்த வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என கூறினார்.