ரூ.100 கோடியில் மருத்துவ ஆராய்ச்சி மையம்- அமைச்சர் மா.சு.

 
Ma subramanian

ரூ.100 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் டாக்டர் எம்.ஜி.ஆர் வளாகத்தில் மருத்துவப் பல்கலைக்கழக விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம்  தொகை ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.699/- ஆக இருந்தது, இந்த ஆட்சியில் ரூ.849/- ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் காப்புறுதித் தொகை ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.2 இலட்சமாக இருந்தது, தற்போதைய ஆட்சியில் ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் சிகிச்சை முறைகள் 1450 ஆக இருந்தது, தற்போதைய ஆட்சியில் 1513 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை 970, தற்போதைய ஆட்சியில் 1829 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. 

கடந்த ஆட்சிக் காலத்தில் பிரத்யேக சிகிச்சை முறைகளின் எண்ணிக்கை 2, தற்போதைய ஆட்சிக் காலத்தில் 8 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் காப்பீட்டு திட்டம் என்பது பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கின்றது. அதேபோல் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெரிய அளவில் இன்னொரு சிறப்பான திட்டமும் உள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டத்தின் படி, 2021 டிசம்பர் திங்கள் 18 ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களால் மேல்மருவத்தூர் மருத்துவ கல்லூரியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடியாக அவர்களை காக்கும் பொருட்டு, முதல் 48 மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் தரும் வகையில் அந்தத் திட்டம் அப்போது தொடங்கி வைக்கப்பட்டது. 

அத்திட்டத்தின் மூலம் இதுவரை பயன்பெற்றுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை 1,81,860 பேர், இதன் மூலம் அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் செலவழிக்கப்பட்டுள்ள தொகை ரூ.159.48 கோடி ஆகும். இதில் அரசு மருத்துவமனைகளில் 237களிலும், தனியார் மருத்துவமனைகள் 455களிலும் ஒட்டு மொத்தமாக 692 மருத்துவமனைகளில் இத்திட்டம் பயன்பாட்டில் இருக்கின்றது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவிற்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் விடுபட்டு போகக்கூடாது என்கின்ற வகையில் மாஅறிவுறுத்தலின்படி, இந்த சிறப்பு முகங்கள் இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

மருத்துவத்துறையின் அடுத்த கட்டமாக மருத்துவ ஆராய்ச்சி மையம் சென்னை, கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம். அந்த வகையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி. டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடி செலவில் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்று கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்கின்ற பெயரில் புதிய கட்டிடம் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்து, திட்டப் பணிகள் மற்றும் வரைபடப் பணிகள் பொதுப் பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக விரைவில் அந்தப் பணிகள் முடிவடைந்து, ஒப்பந்த பணிகள்  தொடங்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது” என்றார்.