ஈரோடு இடைத்தேர்தல்- முதலமைச்சரின் உழைப்பு கிடைத்த மாபெரும் வெற்றி: அமைச்சர் மா.சு

 
masu

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் ரூபாய் 2.65 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரமக்குடியில் திறந்து வைத்தார். 

அங்கு பொது சுகாதார துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, சுகாதாரத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து  பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1 ஆம் தேதி பிறந்த ஆறு குழந்தைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தங்க மோதிரம் அணிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கோடு தமிழ்நாட்டில் வாடகை கட்டிடங்களில் செயல்படும் துணை சுகாதார நிலையங்கள்,  சிதிலமடைந்த நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார கட்டிடங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணி புயல் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவேன் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதற்காக அல்லும் பகலும்,அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி தமிழக முதல்வரின் உழைப்புக்கு, செயல் திறனுக்கு செயலாற்றலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. 2028 டிசம்பரில் தான் மதுரை எய்ம்ஸ் கட்டிமுடிக்கப்படும். அண்ணாமலை தான் அதிமுகவை ஒன்று சேர்த்துவிட்டாரே, பிறகு ஏன் அதிமுக பிளவு பட்டிருப்பதாக கூறுகிறார்?” எனக் கேள்வி எழுப்பினார்.