ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கும் கலந்தாய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி..
MBBS, BDS படிப்புகளுக்கு கலந்தாய்வு நடப்பது போல் ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய ஹோமியோபதி ஆணையம் சார்பில் "ஹோமியோலைட்டன் 2024" என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஹோமியோபதி மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுக்கான துறை சார்ந்த பட்டறை, சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவம் புத்துணர்ச்சி பெற்று பயனளிக்க தொடங்கியுள்ளன. கொரோனா காலகட்டத்தில் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்டவை தான் உதவின.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்திற்கு அருகிலேயே 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்ட தற்போது திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய மருத்துவத் துறை அமைச்சரை சந்திக்க உள்ள நிலையில், இந்த ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி கட்ட நிதி கேட்க இருக்கிறோம். மிக விரைவில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி வர உள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளோடு சேர்த்து, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலந்தாய்வு நடத்தும் குழுவிடம் நடத்திய ஆலோசனையில், ஒட்டுமொத்தமாக கலந்தாய்வு நடத்துவதில் சட்ட சிக்கல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அடுத்த ஆண்டில் கலந்தாய்வு நடத்தப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஹோமியோபதிக்கென தனி ஆணைய கட்டிடம் அமைக்க வேண்டும் என விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.