இர்ஃபான் செய்தது மன்னிக்க முடியாத செயல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்..!!
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை யூடியூபில் வெளியிட்ட யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்க முடியாதது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஃபுட் ரிவ்யூ செய்து வரும் பிரபல யூடியூபர் இர்பான் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஹசீஃபா - இர்பான் தம்பதிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. முன்னதாக ஹசீஃபா கர்ப்பமாக இருந்தபோது, இர்பான் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாக அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உடனே இர்பான் சம்பந்தப்பட்ட வீடியோவை டெலிட் செய்ததுடன், இச்செயலுக்காக மன்னிப்பு கோரினார்.
அதன்பின்னர் இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை அரங்கில் மனைவியுடன் இருந்தபோது, குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியுள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இது மீண்டும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இது மருத்துவ விதிகளின் படி குற்றம் என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டிஎம்எஸ் மருத்துவமனை மற்றும் இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதா மற்றும் இர்ஃபான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “யூடியூபர் இர்ஃபான், தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட அவரது செயல் மன்னிக்கவே முடியாது. எனவே அவர் மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாது. அவரது செயல் கண்டிக்கத்தக்கது. குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது இர்ஃபான் விவகாரத்தில் மருத்துவர் நிவேதிதா மீதும் செம்மஞ்சேரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை காப்பாற்ற திமுக அரசு எப்போதும் நினைக்காது” என்று தெரிவித்துள்ளார்.