தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

 
masu camp

தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆயிரம் காய்ச்சல் தடுப்பு முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சார் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எச்3என்2 காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என மாநில அரசு அறிவித்து இருந்தது. அதன்படி சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்த முகாம் மூலம் தமிழகத்தில் எத்தனை பேர் எச்3என்2 காய்ச்சலால் பதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியவரும். அதன் பிறகு அந்த காய்ச்சலால் பதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த இன்று 1000 மருத்துவ முகாம்களை அமைத்துள்ளோம். சமூக பரவல் ஆவதற்கு முன்பே இதனை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா தற்போது 20 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவது நல்லது. கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றினாலே இன்ப்ளூயன்ஸா தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இவ்வாறு கூறினார்.