பள்ளி விழாவில் பரபரப்பு: கயிறு இழுக்கும் போட்டியில் கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்!

 
1

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியின் 64-ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அந்த தனியார் பள்ளியின் நிர்வாகிகள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் தலைமை விருந்தினராக பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்றார். இவர் இந்த தனியார் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கடந்த சில நாட்களாகவே இப்பள்ளியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதை அமைச்சர் வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், பள்ளியின் 64வது விளையாட்டு விழாவிற்கான போட்டிகளை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். அப்போது, விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது.

இந்த கயிறு இழுக்கும் போட்டியில் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் பிரிவில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு விளையாடினார். போட்டியின்போது, இரு பிரிவினரும் வெற்றி பெரும் நோக்கில் பலமாக கயிற்றை இழுத்ததால், திடீரென கயிறு பாதியில் அறுந்து விழுந்தது.

இதனால், அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது அணியில் இருந்த 15-க்கும் மேற்பட்டோர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனைத் தொடர்ந்து, கீழே விழுந்தவர்களை அருகில் இருந்த பாதுகாவலர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கைகொடுத்து தூக்கிவிட்டனர்.

சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். பள்ளி விளையாட்டு விழாவில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கீழே விழுந்த சம்பவம் அங்குபரபரப்பை ஏற்படுத்தியது