சென்னை, கோவையில் ரூ.200 கோடி செலவில் குப்பையிலிருந்து மின்சார தயாரிக்கும் திட்டம் - அமைச்சர் கே.என். நேரு..!

 
1 1

 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3-ஆம் நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. அதில், உறுப்பினர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய சட்ட மன்ற உறுப்பினர் விஜயகுமார், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, "சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரை தான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் எந்த வேலை செய்வதற்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள்? இங்கு சொந்தமாக இடம் வாங்கிக் குப்பை கொட்டினாலும், கல் குவாரியில் கொட்டினாலும் பிரச்சனை ஏற்படுகிறது" என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, "நகரத்தை தாண்டி 15 கி.மீ தூரத்தில் இடம் இருந்தாலும் அங்கு ஏற்பாடுகளை செய்து குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். சென்னை, கோவை, மதுரையில் ரூ.200 கோடி செலவில் குப்பையிலிருந்து மின்சார தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அந்த திட்டத்தை திருப்பூரிலிருந்து கூட தொடங்க தயாராக உள்ளோம்" என்றார்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், ஊத்துக்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அருகே உள்ள கிராம பகுதிகளை நகராட்சியுடன் இணைந்து தரம் உயர்த்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்துவது இந்த குழுவின் பரிசீலனையில் உள்ளது. இதனால் 100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், நன்கு பரிசீலனை செய்யப்பட்டு தான் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த் தேக்கத்திலிருந்து ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, தேர்வாய் கண்டிகை நீர்த் தேக்கத்தில் இருந்து 32 கி.மீ நீளத்திற்கு குழாய் அமைத்து, தண்ணீர் கொண்டு செல்லும் பணியை ஊரக வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக வரும் 250 எம்எல்டி தண்ணீரை அருகில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

பேரூராட்சி நகராட்சிகளில் கழிவுநீரை நன்னீராக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கழிவுகளை காய வைத்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஊத்துக்கோட்டை பகுதியிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகளும் நடைபெறும் என்று பதில் அளித்தார்.