திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திடீரென ரத்து!

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வருகிற 18-ஆம் தேதி மாலை நடைபெறுவதாக இருந்தது. அதற்கான மேடை அமைக்கும் பணிகள், பொதுமக்கள் உட்காருவதற்காக திடல் ஆகியவை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதனை முன்னிட்டு தமிழக நகர்ப்புற துறை அமைச்சரும் சேலம் மாவட்ட பொறுப்பாளருமான கே.என். நேரு இன்று மதியம் ஆத்தூரில் நடைபெற்றுவரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம் , மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டிஎம் செல்வகணபதி , எம்எல்ஏ ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, “தமிழகத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழை இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருப்பதால் வருகிற 18-ஆம் தேதி ஆத்தூரில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள இருந்த திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் முதல்வரிடம் பொதுக் கூட்டம் நடத்துவதற்கான அனுமதி பெற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.