“தனியார் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு செல்வதாக கூறுவது தவறான தகவல்”- கீர்த்தனா
தனியார் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு செல்வதாக கூறுவது தவறான தகவல்.எந்தவொரு நிறுவனமும் ஓரிரு வாரங்களில் முடிவெடுத்து இடத்தை மாற்றிக்கொள்ளாது. அப்படி ஓரிரு நிறுவனங்கள் சென்றால்,அந்த நிறுவனங்கள் 6 மாதங்கள் அல்லது ஓராண்டுக்கு முன் எடுத்த முடிவாகத்தான் இருக்கும் என அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சா் கீர்த்தனா, “பெண்களின் கண்ணியம் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்பதில் எங்கள் முதல்வர் உறுதியாக இருக்கிறார். இந்தத் துறையை எனக்கு வழங்கி பெண் இனத்தையே பெருமைப்படுத்தியுள்ள முதல்வருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க தவெக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ராமேஸ்வரம் அருகில் புதிய விமான நிலையம் அமைக்கவும் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு (Double Fortified Salt), " செறிவூட்டப்பட்ட உப்பு" (Vettri Double Fortified Salt) நியாய விலைக்கடைகளிலும் வெளிச்சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும். தனியார் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு செல்வதாக கூறுவது தவறான தகவல்.எந்தவொரு நிறுவனமும் ஓரிரு வாரங்களில் முடிவெடுத்து இடத்தை மாற்றிக்கொள்ளாது. அப்படி ஓரிரு நிறுவனங்கள் சென்றால்,அந்த நிறுவனங்கள் 6 மாதங்கள் அல்லது ஓராண்டுக்கு முன் எடுத்த முடிவாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக, ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும். 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் பயன்பெறுவர். உப்பளத் தொழிலாளர் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 23,000 தொழிலாளர் குடும்பங்கள் பயனடையும். இதற்கான ரூ.16.78 கோடி செலவினை அரசே ஏற்கும். விழுப்புரம் ஓமந்தூர் பகுதியில் 229 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா ரூ.146 கோடியில் சிப்காட் நிறுவனம் அமைத்திடும். இப்பூங்காவில் அத்தியாவசியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் ரூ.1,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன் 3,200 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். கங்கைகொண்டான் மற்றும் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.224 கோடியில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆயத்த தொழிற்கூட வசதிகள் (Plug & Play) உருவாக்கப்படும். தொழிலாளர்களின் பாதுகாப்பான தங்குமிட வசதி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் இரண்டாம் கட்டமாக 2,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் கட்டிடம் ரூ.130 கோடியில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும்.

