“வருங்கால பிரதமர் விஜய்”- அமைச்சர் ஜெகதீஸ்வரி

 
s

வருங்காலத்தில் தவெக ஆட்சி மட்டுமே இருக்கும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.

ராஜபாளையத்தில் நடைபெற்ற தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, “வருங்காலத்தில் தவெக ஆட்சி மட்டுமே இருக்கும். இன்றைய முதல்வர் விஜய் வருங்கால பிரதமர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு நொடியும் அதை நோக்கியே பயணிப்போம். நகரம், கிளை, ஒன்றியம் என அனைத்து பகுதிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்படும். இனிமேல் ஆட்சியர் அலுவலகத்திற்கோ, எம்.எல்.ஏ. அலுவகத்திற்கோ மக்கள் அலைய வேண்டாம். புகார் பெட்டிகளில் புகாரை அளித்தால், புகார் குறித்து கேட்டறிய நாங்களே உங்களை தேடி வருவோம்.

என்னை வாழவைத்த ராஜபாளையம் மக்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். எனது மூன்று குழந்தைகளுடன் வாழ்வாதாரத்தை தேடி வந்தவள் நான். தையல் தொழிலை நம்பி 18 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையத்திற்கு வந்தேன். பெண்ணாக இருந்து அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தவள் நான். இதனால் மக்களின் கஷ்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடியும். பெண்களின் மனதை புரிந்துகொண்டவள் நான் என்பதால்தான் எனக்கு இந்த துறையை வழங்கியுள்ளனர். என்னை அசிங்கப்படுத்தியும், அவமானப்படுத்தியும், கொச்சைப்படுத்தியும் பார்த்தீர்கள். கடைசி அத்தியாயம் உயிர்தானே... போனால் போகட்டும். எனது முதல்வருக்காகவும், என் மக்களுக்காகவும், ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்காகவும் ஒவ்வொரு நொடியும் போராடுவேன். போராடிக்கொண்டே இருப்பேன். முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து பாருங்கள். எல்லாவற்றிற்கும் நான் தயாராக உள்ளேன்... சந்திப்போம்” என்றார்.