“ஸ்டாலின் ஐயா என்னை காப்பாத்துங்க” வேண்டுகோள் விடுத்த சிறுவனுக்கு ஓடி உதவிய அமைச்சர்

 
சிறுவன்

இதய நோயால் பாதிக்கபட்டு அறுவை சிகிச்சைக் காக காத்திருக்கும் சிறுவன் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அமைச்சர் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது. 

 முதல் அறுவை சிகிச்சை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்- சரண்யா ஆகியோரது நான்கு வயது மகன் கஜன் இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும் ரத்தம் மாற்று குழாயில் ஏற்பட்ட பிரச்சனையால் ஐந்து வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

ஏற்கனவே  இதயத்துளை அடைப்பு அறுவை சிகிச்சைக்கு தாங்கள் வைத்திருந்த பணத்தை முழுமையாக செலவிட்டு இருந்த நிலையில்  
தற்போது இதற்கான முழுமையான அறுவை சிகிச்சை செய்ய ஏழு லட்சம் தேவை, இதற்கான தொகை  தங்களிடம் இல்லை என சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர். அந்த சிறுவனும், என்னை முதல்வர் ஸ்டாலின் ஐயா தான் காப்பாற்ற வேண்டும் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில்,  “என் பெயர் கஜன், பெருநாழியில் இருக்கேன். ஸ்டாலின் ஐயா காப்பாத்தணும், அம்மா, அப்பாட்ட காசு இல்லை. எனக்கு ஆபரேஷன் பண்ணுவதற்கு காசு இல்லை. முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் ஐயா தான் காப்பாத்தணும்”  என தனது இரு கைகளால்  கும்பிட்டவாரு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுகுறித்து முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனுக்கு தெரிய வந்ததை அடுத்து, அவர் தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து சன்முகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பா ஆத்திமுத்து மற்றும் சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித்மணிகண்டன் உள்ளிட்டோர் ரூ.25 ஆயிரம் நிதி உதவியை சிறுவனின் பெற்றோர்களிடம்  வழங்கினர்.

வேண்டுகோள்

இதனையடுத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஏற்பாட்டின் படி சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் கலந்தாலோசித்து  சுகாதார துறை மூலம் அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யபட்டு இன்று உடனடியாக  பரமக்குடி துணை இயக்குனர் பிரதாப் தலைமையில் மருத்துவர்கள் குழு சிறுவன் வீட்டுக்கே சென்று சிறுவனை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு கூட்டி சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக  சென்னையில் அனுமதிக்கப்பட அழைத்து சென்றனர்.