தமிழ்நாட்டில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடலா?- அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

 
geetha geetha

தமிழ்நாட்டில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான தகவல் தவறு, கடந்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 44 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கீதா ஜீவன்  கூறியுள்ளார். 

அரசு பெண் விடுதிகளில் இனி பெண் காவலர்கள் நியமனம்: அமைச்சர் கீதா ஜீவன்


இதுதொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என 05.07.2025 அன்று நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் தொடர்ந்து இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்தி பிரசுரிக்கப்பட்டு வருகிறது.

இச்செய்தியின் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும், தமிழ்நாட்டில் 500 அங்கன்வாடி மையங்களை மூடுவதற்கு கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கைகள் புறம்பானவைகளாக உள்ளன. உண்மை நிலைக்கு இவ்வரசு 2021-ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது 54,439 அங்கன்வாடி மையங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்தன. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின்பு கடந்த நான்கு ஆண்டுகளில், மேலும் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு தற்போது 54,483 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

Meal scheme for students to be upgraded from next academic year, says  Minister Geetha

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அனைத்து குழந்தைகள் மையங்களும் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அவ்வெண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது. தேவைப்படின், கூடுதலாக அங்கன்வாடி மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 54,483 அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கைக்குள், தேவையான இடத்திற்கு குழந்தைகள் மையங்களை இடமாற்றம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதனடிப்படையில்தான், அதிக நகரமயமாக்கல் காரணமாக இடம்பெயரும் மக்கள் தொகை, பயனாளிகளின் வருகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முதன்மை அங்கன்வாடி மையத்தினை குறு மையமாகவும், குறு மையத்தினை முதன்மை அங்கன்வாடி மையமாக மாற்றிடவும், திட்டம் சென்றடையாத புதிய பகுதிகளில், புதிய மையங்களை துவக்கிடவும், குறைவான பயனாளிகள் கொண்டு அருகருகே உள்ள இரு மையங்களை இணைத்திடவும், தூரத்தில் செயல்படும் மையங்களை பயனாளிகளின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே புதிதாக ஆரம்பிக்கவும், மலைப்பகுதி மற்றும் யாரும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளை கண்டறிந்து புதிதாக குறு மையங்களை ஆரம்பித்திடவும், கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

மேற்கூறிய யாவையும் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இந்த மறுசீரமைப்பு இன்னமும் நடைமுறைப்பத்தப்படவில்லை. அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போதும் 54,483 குழந்தைகள் மையங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தும் நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது 54,483 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வரும் தருணத்தில் புதிதாக 501 மையங்கள் மூடப்பட்டுள்ளன என்ற செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். மேலும், தற்போது 7,783 அங்கன்வாடி காலிப் பணி இடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.