கண்ணாடி பாலம் திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது - அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!
திட்டத்தை செயல்படுத்தாமல் தூங்கிவிட்டு, தற்போது அதிமுக கொண்டுவந்தது என்று கூறுவது நியாயமல்ல என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்துள்ளார். இது அவர் கொண்டுவந்தது இல்லை. அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டம். 2018ல் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக நிதின் கட்கரி இருந்தபோது, டெல்லியில் கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் பங்கேற்று, கன்னியாகுமரி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி. எனவே விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று மூன்றே நாளில் மத்திய அரசு அனுமதி கொடுத்தது. அதன் பிறகு சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் பெற்றோம். 2020ல் கொரோனா காலம் என்பதால் இந்த பணி அப்படியே தடைப்பட்டுவிட்டது. ஸ்டாலின் மாடல் அரசாங்கம் டெண்டர் விட்டு இந்த பணியை செய்திருக்கிறார்கள். திட்டத்தை கொண்டுவந்தது அதிமுகதான்” எனக் கூறினார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் எ.வ.வேலும் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
கண்ணாடி பாலம் திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின் தான், டெண்டர் விடப்பட்டு கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்தாமல் தூங்கிவிட்டு, தற்போது அதிமுக கொண்டுவந்தது என்று கூறுவது நியாயமல்ல என கூறினார்.