அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் ஆளுநர் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என கூறப்பட்டது. இதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். சபாநாயகர் அப்பாவு பொன்னாடை போர்த்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவர் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார்.
இந்த நிலையில், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், ஆளுநர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை . முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளார். ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுநருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார். தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது என கூறினார்.