தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வான 59 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்!

 
tn

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 59 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சி.வெ.கணேசன் வழங்கினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி || தேர்வுகளில் தொழிலாளர் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 37 தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், 8 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் (மாற்றுத் திறனாளிகள்). உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) தொழிற்பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்ட இருவர் மற்றும் இளநிலை உதவியாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என மொத்தம் 59 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறையின் கூட்டரங்கில் இன்று (08.03.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், திரு. சி.வெ.கணேசன் அவர்களால் வழங்கப்பட்டது.


மேலும், 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் / முதல்வர்கள் நால்வர், பயிற்சி அலுவலர்கள் நால்வர். உதவி பயிற்சி அலுவலர் எட்டு பயிற்றுநர்கள் மற்றும் இளநிலை பயிற்சி அலுவலர் 8 பயிற்றுநர்கள் என மொத்தம் 24 அலுவலர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளையும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த், இ.ஆ.ப. முதன்மை செயலாளர்/தொழிலாளர் ஆணையர், முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் திருமதி எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் தொழிலாளர் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.