“நான் கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக் கொள்வேன்”- அருண்ராஜ்
அரசுத் துறையை நாங்கள் நம்பவில்லை என்றால் யார் நம்புவார்கள், கண்டிப்பாக நாங்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வோமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதார நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் இருக்கக்கூடிய அவசர சிகிச்சை பிரிவு, ஆண்களுக்கான பொது மருத்துவம் பிரிவு, மற்றும் மருத்துவமனையில் இருக்கக்கூடிய கழிவறை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது, மருத்துவமனையின் முதல்வர் சாந்தாராம் உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சருடன் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், “நான் படித்த இந்த சென்னை மருத்துவ கல்லூரியை நீண்ட நாட்களுக்கு பிறகு அமைச்சராக பார்வையிட்டதில் மகிழ்ச்சி. சுகாதார துறை குறித்து முதலமைச்சர் நேற்று ஒரு ஆலோசனை மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் சுத்தம் மற்றும் சுகாதாரமான சூழல் இருக்காது என்பதனாலேயே மக்கள் தனியார் மருத்துவமனையை நோக்கி செல்லும் நிலை பொதுமக்கள் இடையே இருந்து வருகிறது. மற்ற மாநிலங்களவை தமிழகத்தில் அரசு மருத்துவமனை சிறப்பாகவே இருக்கிறது. இதை மேம்படுத்துவதற்கான சூழல் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். அவசர சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு அவர்களது அவசர தேவையை பொறுத்து சிகிச்சை அளிக்கும் விதமாக அவசர சிகிச்சை பிரிவு இருக்கிறது. தேவைப்பட்டால் அனைத்து சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து விதமான வசதிகளும் இங்கு இருக்கிறது. தேவையான வசதிகள் இருந்தாலும் கூட மேம்படுத்துவதற்கான தேவைகள் இருக்கிறது. அரசு மருத்துவமனையை தாண்டி தனியார் மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்றால் செலவுகள் அதிகரிக்கிறது, காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனை சென்றால் ஆயிரம் ரூபாய் வருகிறது. இவை அரசு மருத்துவமனையில் இலவசமாக கிடைக்கிறது. அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் இங்கு உடனடியாக எடுக்கும் வகையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணியிடமாற்ற கவுன்சிலிங் விரைவில் நடைபெற இருக்கிறது. முழுவதுமாக வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையான முறையில் கவுன்சிலிங் நடத்தப்படும். யாரையும் நம்பியும் ஏமாந்து விட வேண்டாம் என்று முதலமைச்சர் சார்பாக தான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை பிணவரையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக உடல்கள் இருப்பதாக தகவல் வந்தது. நீதிமன்றத்தில் வழக்குகள் காரணமாக அங்கு உடல்கள் இருப்பதாக செயலாளர் சொல்கிறார். அது குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.
அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, அரசுத் துறையை நாங்கள் நம்பவில்லை என்றால் யார் நம்புவார்கள், கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வோம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

