தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் - அமைச்சர் அருண் ராஜ் வேண்டுகோள்..!

 
1

திருவள்ளூர் அருகே உள்ள தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று மதியம் (ஜூன் 21) அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.மிக ஆபத்தான இந்த அமோனியா வாயுவை சுவாசித்த ஏராளமான தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.அவர்களில் பலர் தனியார் மருத்துவமனைகளிலும், கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் சென்னை ராஜீவ் காந்தி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் அருண் ராஜ் சந்தித்து ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் மொத்தம் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் சில தொலைக்காட்சி ஊடகங்களில் 7 பேர் உயிரிழந்ததாக வெளியாகும் தகவல்கள் உண்மை அல்ல. இதுவரை 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.

பாதிக்கப்பட்ட 66 பேரில் 60 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரும் வடமாநிலத் தொழிலாளர்கள். மீதமுள்ள 64 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேர், வேல்ஸ் மருத்துவமனையில் 27 பேர், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் தற்போது செயற்கை சுவாச உதவியுடன் (Ventilator Support) சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒவ்வொரு நோயாளிக்கும் அவசரகால மருத்துவ நிபுணர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய தனி மருத்துவக் குழு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், முதலமைச்சரின் உத்தரவுபடி, உயிரிழந்த இருவரின் உடல்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அரசு செலவிலேயே அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு விதிமுறைகளை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில், தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.