தந்தை உயிரிழந்த நிலையிலும் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி! வீட்டிற்கே சென்று அமைச்சர் செய்த செயல்

தந்தை இறந்த சோகத்திற்கு இடையே 11 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவி ஷாலினியை சந்தித்து ஆறுதல் கூறிய பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவிக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொய்கைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாணவி ஷாலினி. அவர் அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை உடல் நல குறைவால் சண்முகம் இறந்துவிட்டார். இருப்பினும் அந்த துக்கத்தை மனதில் இருத்திக் கொண்டு மாணவி ஷாலினி 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினார்.
11 ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வி துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று மாணவி ஷாலினியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் கல்வி உதவித்தொகையை அந்த மாணவிக்கு வழங்கினார்.