பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை? - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. கடும் வெயிலுடன் அனல்காற்றும் வீசுவதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு பஞ்சாப் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் அதிகரித்துக் காணப்படும் வெயிலினால், காலை 6 மணி முதல் 9 மணி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடந்து தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
வேலூர் உள்பட 14 மாவட்டங்களில் வெயில் சதமடித்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார். விரைவில் இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.