வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் இணையத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

 
anbil

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் இணையத்தை தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக் கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம் சார்பில் பொது நூலகங்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் நூல்கள் கொள்முதல் செய்வதற்கான இணையதளம் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் இன்று (11.03.2024) தொடங்கி வைக்கப்பட்டது. வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கையை (2024) அடிப்படையாகக் கொண்டு நூல் கொள்முதல் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நூல் கொள்முதல் செய்வதற்குத் தங்களை பதிவு செய்து கொண்டு நூல்களைப் பதிவுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். நூல் தேர்வுக் குழுவில், துறை சார் வல்லுநர்கள், நூலகர்கள் மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் ஆகியோர் இடம்பெறுவர்.ஒவ்வொரு நூலகமும் ஒவ்வொரு ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மதிப்பிலான நூல்களை இணையதளம் வழி தேர்வு செய்து பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் விண்ணப்பம் செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு இணையதளத்தில் இருக்கும். ஒவ்வொரு காலாண்டு வாரியாக நூல் கொள்முதல் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கீழ்க்கண்ட நூல் கொள்முதல் இணையதள முகவரியில் https://bookprocurement.tamilnadupubliclibraries.org/ வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024 யினை பொது நூலக இயக்கத்தின் இணையதளத்தில் இருந்து (https://tamilnadupubliclibraries.org/) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல் இரவல் வழங்கும் சேவையினைத் தொடங்கி வைத்தார். 

முதல் கட்டமாக சிறுவர் நூல்களும், தமிழ் நூல்களும் வாசகர்களுக்கு இரவல் வழங்குவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இரவல் எடுத்துச்செல்வதற்கான தெளிவான விதிமுறைகள் அண்ணா நூற்றாண்டு நூலக இணையதளத்தில் (www.annacentenarylibrary.org)உள்ளது.  மேலும், நூலகத் துறை வரலாற்றில் முதன் முறையாக அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணையினை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப., சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவர் திரு.மனுஷ்யபுத்திரன், இணை இயக்குநர் திரு.ச.இளங்கோ சந்திரகுமார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.