தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்- அமைச்சர் அன்பரசன்

பழங்குடியினர் நிறைந்த பகுதிகளில் கடன் உத்தரவாதத்துடன் (Credit Guarantee) ரூ.100 கோடி அளவில் பழங்குடியினருக்கு, தொழில் தொடங்க கடனுதவிகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தேசிய சிறு தொழில் நிறுவனத்தின் ஒரு முனை பதிவு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சந்தை ஆகிய திட்டங்களில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். கிராம அளவிலான கைவினை குழுக்கள் மற்றும் குறுந்தொழில் குழுமங்கள் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை பாதுகாத்திடும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.18.18 கோடி மதிப்பில் ஏற்படுத்தி தரப்படும். "உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs)
மூலம் 5 தனித்துவமான தயாரிப்புகளுக்கு பொதுவான வணிகக் குறியீடுகள் (branding) ரூ.3.62 கோடியில் உருவாக்கப்படும். இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலை சாகுபடிக்கு தேவைப்படும் விவசாய இயந்திரங்கள் ரூ3.25 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளின் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்க்கு வழங்கப்படும்.
தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முன்வரும் தொழில் ஆர்வலர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தொழில் நுட்ப பரிமாற்றம், பயிற்சி, மானியங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ரூ.5 கோடி மதிப்பில் ஒரு திட்டம் உருவாக்கப்படும். 60 வயதிற்கு உட்பட்ட இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, விபத்து மற்றும் பாம்புகடியினால் ஏற்படும் உயிரிழப்பிற்கு இழப்பீடாக ரூ.20 இலட்சம் வழங்க ஏதுவாக ரூ.1.50 கோடி மதிப்பில் மூலதன நிதியம் உருவாக்கப்படும். இயற்கையாக அமையப் பெற்றிருக்கும் தொழில் குழுமங்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அக்குழுமங்களுக்கான உட்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் இதர முன்னெடுப்புகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பழங்குடியினர் நிறைந்த பகுதிகளில் கடன் உத்தரவாதத்துடன் (Credit Guarantee) ரூ.100 கோடி அளவில் பழங்குடியினருக்கு, தொழில் தொடங்க
கடனுதவிகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்” என்றார்.