"தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி! அதை முதல்வர் விஜய் ஏற்றுவார்"- ஆதவ் அர்ஜுனா
ஜூலை 18 மற்றும் நவம்பர் 1 இரண்டு நாட்களும் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ் மொழியை முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டிற்கென தனிக்கொடியை உருவாக்க வேண்டும். அதை நவ. 1 மற்றும் ஜூலை 18-ஆம் தேதி முதல்வர் கையால் முதல்முறையாக ஏற்ற வேண்டும். தேசியக் கொடிக்கு இணையாகப் போற்றக்கூடிய ஒரு கொடியைத் தமிழகத்துக்கு உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தேசியக்கொடிக்கு சமமாக தமிழ்நாட்டிற்கான மாநிலக் கொடியை நாம் உருவாக்க வேண்டும். ஜூலை 18 மற்றும் நவம்பர் 1 இரண்டு நாட்களும் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்.. சுதந்திர தினம், குடியரசு தினம் போல் இரண்டு நாட்களும் விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும். 1-8ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும். தாய் மொழியை விட்டால் தாயை விட்டுச் செல்வதற்கு சமம். நம் மாநில அடையாளமே தாய் மொழிதான். நாம் என்ன வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் நம் சிந்தனை நம் மொழியாக இருக்க வேண்டும்.
நான் தமிழ்மொழியைக் காப்பாற்றவில்லை. தமிழ்தான் நம்மைக் காப்பாற்றுகிறது. எதுகை மோனையில் எனக்கு பேச வராது, ஆனால் தமிழ் வழி கல்வியில் பயின்றேன். எனக்கு பிடித்த வகுப்புகள் தமிழும், சமூக அறிவியலும் தான். முதலமைச்சர் பேசாமல் செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்; ஊழல் இல்லாமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்; திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே எங்கள் கவனம் உள்ளது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எத்தனை வீடியோ போட்டு பொய் பரப்புரை செய்தாலும் மக்கள் பிரச்னையை சரிசெய்வதற்கு, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

