“ரூ.1000 கோடிக்கும் மேல் விளையாட்டு துறைக்கு நிதி; பயிற்சியாளர்களுக்கு 50% ஊக்கத்தொகை”- ஆதவ் அர்ஜூனா

 
ஆதவ் அர்ஜூனா

விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி இனி பயிற்சியாளர்களுக்கும், 50% ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “கடந்த 100 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாத நிலை நீடிக்கிறது. நமது வீரர்கள் தேசிய அளவில் 6 அல்லது 7-வது இடத்திலேயே இருந்து சிரமப்பட்டு ஆசிய போட்டிகளுக்குச் செல்கிறார்கள். ஒரு விவசாயி எப்படி காலையில் 4 மணிக்கு எழுந்து தன்னுடைய வேலையை ஆரம்பிகிறாரோ அதே போல் தான் விளையாட்டு வீரர்களும் தங்கள் வேர்வையை சிந்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. 8 வயதில் இருந்தே விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அடையாளம் காணப்பட வேண்டும்.'என்ன வேண்டுமானாலும் செய்யுங்க, ஆனால் ஒரு தாயின் கண்ணில் இருந்து கண்ணீர் வரக்கூடாது.. யாரும் போதை பின்னாடி போக கூடாது' இது தான் முதல்வர் எங்களிடம் சொன்னார். தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. விளையாட்டுத் துறைக்கு தேவையானதைச் செய்து கொடுப்பவர் நமது முதல்வர். கூடிய விரைவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வர். பள்ளிகளில் வாரத்தின் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகளை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தைக் கல்லூரிகளுக்கும் முதல்வர் விரிவுபடுத்த வேண்டும். 30 ஆண்டுகள் விளையாட்டுத்துறையில் வளர்ச்சி இல்லை

விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி இனி பயிற்சியாளர்களுக்கும், 50% ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசின் உயரிய ஊக்கத் தொகைகளை வழங்கினார் முதல்வர். இனி, பயிற்சியாளர்களுக்கும் 50 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு அதற்கேற்ற விளையாட்டுச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும்.  ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, இளைஞர் நலனுக்கு என்ன வேண்டுமென்றாலும் செய்து கொடுங்கள் என்று சொல்லும் முதலமைச்சர் நம்மிடம் உள்ளார். 1994க்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த விளையாட்டு கட்டமைப்பும் உருவாக்கப்படவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கியவற்றை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டனர். வரலாற்றில் முதன்முறையாக ரூ.1000 கோடிக்கும் மேல் விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கியவர் முதலமைச்சர் விஜய் மூன்றாம் பாலினத்தவருக்கு மாநில அளவில் போட்டிகளை உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் கனவு.” எனக் குறிப்பிட்டுள்ளார்.