மே மாதம் முதல் மினி பேருந்துகளை இயக்க அனுமதி! பேருந்து கட்டணம் இவ்வளவா?

தமிழகத்தில் கடந்த 1997-ம் ஆண்டு கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவை வழங்கும் வகையில் மினி பேருந்து திட்டம் தொடங்கப்பட்டது. இந்த மினி பேருந்துகள், 16 கி.மீ.வரை சேவையில்லாத வழித்தடத்திலும், 4 கி.மீ. முக்கிய சாலைகளில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும், எல்லையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதைக் கருத்தில் கொண்டு மினி பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து கடந்த ஆண்டு ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும்வகையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியிட்டது.
அதன்படி, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கிமீ கூடுதலாக இயக்கவும், பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கவும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த புதிய விரிவான மினி பேருந்து திட்டம் வரும் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் உடன் சேர்த்து மினி பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவும் வரும் மே 1ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, முதல் 4 கி.மீ வரை 4 ரூபாய் கட்டணமாகவும், 4 முதல் 6 கி.மீ வரை 5 ரூபாய் கட்டணமாகவும், 6 முதல் 8 கி.மீ வரை 6 ரூபாயும், 8 முதல் 10 கி.மீ வரை 7 ரூபாயும், 10 முதல் 12 கி.மீ வரை 8 ரூபாயும், 12 முதல் 18 கி.மீ வரை 9 ரூபாயும், 18 முதல் 20 வரை 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.