மேடையிலேயே பிரதமர் மோடியைக் கேலி செய்த மிமிக்ரி நடிகர்! ராகுல் காந்தியின் ரியாக்ஷன் என்ன?
இந்தூரில் மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அரசு இயந்திரத்தை பாஜக மேலிடமும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கைப்பற்றி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
அதைத் தொடர்ந்து, மேடை ஏறிய நகைச்சுவை நடிகர் புல்கிட் மணி, ராகுல் காந்தியிடம் பிரதமர் மோடி பேசுவதுபோல் கிண்டலாக பேசினார். குறிப்பாக, பிரதமர் மோடி, வெளிநாட்டுத் தலைவர்களை கட்டிப்பிடிப்பது போன்றும், அடிக்கடி 'மை ஃபிரண்ட்' என்ற வார்த்தையை கூறியும் புல்கிட் மணி நடித்துக் காட்டினார்.
குறிப்பாக, எப்படி இருக்கிறீர்கள் என்று புல்கிட் மணி கேட்டதற்கு, "நான் நன்றாக இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், மோடி ஜி?" என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.
ஏற்கெனவே, பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின்போது, பிற நாடுகளின் தலைவர்களை கட்டிப்பிடிப்பதை கேலி செய்து புல்கிட் மணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோக்கள், கடந்த மார்ச் மாதம் முடக்கப்பட்டதை அடுத்து அவர் வெளிச்சத்திற்கு வந்தார்.
அந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தி புல்கிட் மணியிடம், "வேறு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு, புல்கிட் மணி, அந்த அம்மாவுக்கு ஒரு நாற்காலி கொண்டு வாருங்கள்" என்றார். கடந்த 2024-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, மூதாட்டி ஒருவருக்கு நாற்காலி கொடுக்குமாறு பாதுகாப்புப் படையினரிடம் கேட்டுக் கொண்டார். அந்த சம்பவத்தை கேலி செய்யும் விதமாக புல்கிட் மணி நடித்துக் காண்பித்தார். ராகுல் காந்தி மற்றும் புல்கிட் மணியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பாராட்டு தெரிவித்தார்.
இருப்பினும், பாஜக மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். ராகுல் காந்தி அந்த வயதான பெண்ணைக் கேலி செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பாஜக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடி ஒரு வயதான தாய்க்கு மரியாதை கொடுத்தார். ஆனால், ராகுல் காந்தி அந்த நிகழ்ச்சியில் அவரை கேலி செய்தார். இதுதான் உண்மையான அரசியலுக்கும், காட்சி அரசியலுக்கும் உள்ள வித்தியாசம். மரியாதை பெற வேண்டிய வயதில், ராகுல் காந்தியின் இந்த வெட்கக்கேடான செயல், அவருடைய மனநிலையை பிரதிபலிக்கிறதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தி நமது பெண்சக்தியை வேண்டுமென்றே அவமதித்து, ஒரு வயதான பெண்ணை 'முன்கூட்டியே தயார் செய்து கொண்டு வரப்பட்டவர்' என்று கேலி செய்த நபருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார். இதனால்தான், ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இளைஞர்களை ஈர்க்கத் தவறிவிட்டது என சொந்த கட்சியைச் சேர்ந்த சசி தரூர் தெரிவித்திருக்கிறார்.
ராகுல் காந்தியின் வெறுப்பு அரசியல் காரணமாகவே டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் காங்கிரசும், என்.எஸ்.யு.ஐ (NSUI)-யும் வீழ்த்தப்பட்டன. பிரதமர் மோடி, ஒரு மூதாட்டிக்கு மரியாதை அளித்தார். ஆனால், ராகுல் காந்தியோ, முதியவர்கள் அவமதிக்கப்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைவதை பார்க்க முடிந்தது" என்று தெரிவித்தார்.
பாஜக தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான பிரகலாத் ஜோஷி கூறுகையில், "பிரதமர் மோடியை புல்கித் மணி கேலி செய்தது வெட்கக்கேடானது; அருவருப்பானது. ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும், பிரதமர் மோடியின் மறைந்த தாயாரைக் கேலி செய்ய மாணவர் கலந்துரையாடலை ஆயுதமாகப் பயன்படுத்தியது, அடிப்படை இரக்கமும் அரசியல் கலாச்சாரமும் இல்லாததை வெளிப்படுத்துகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது பொறுப்புடன் வரக்கூடியது, இருப்பினும் ராகுல் காந்தி அந்தப் பதவியின் கண்ணியத்தைக் காப்பதில் தொடர்ந்து தவறி வருகிறார். இந்த துஷ்பிரயோக மனநிலையே பொதுமக்கள் காங்கிரஸை மீண்டும் மீண்டும் நிராகரித்ததற்குக் துல்லியமான காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
बस 19-20 का फर्क है 😁 pic.twitter.com/w3yL0ytWpl
— Congress (@INCIndia) September 20, 2026

