இன்று முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்..

 
பால்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், உற்பத்தியாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பால் நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ. 7 கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய  பால்வளத்துறை அமைச்சர் நாசர்,  தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.   இந்த  நிலையில், பேச்சுவார்த்தையில்   உடன்பாடு ஏற்படாததால்  இன்று முதல்  பால் நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
 
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் கூறியதாவது, “தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27½ லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. இதில் 2½ லட்சம் லிட்டர் பால், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுகிறது. தற்போது அரசு பசும்பாலை  ரூ.35க்கும், எருமை பால்  ரூ.44க்கும் கொள்முதல் செய்கிறது.  இது  'யானைப்பசிக்கு சோளப்பொறி' போன்றதாக உள்ளது. இந்த விலை உயர்வு போதாது என்றும் அப்போதே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினோம். குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு ரூ.51-ம் வழங்கும்படி கேட்டிருந்தோம்.

ஆவின் பால்

ஆனால், அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே,  17-ந் தேதி (இன்று) முதல் ஆவின் நிறுவனத்துக்கு  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக   முதல் பால் அனுப்ப மாட்டோம்.  இந்த போராட்டத்தின் மூலம் காலை மற்றும் மாலையில் தலா 50 ஆயிரம் லிட்டர் என்ற வகையில் தொடர்ந்து  5 நாட்களில் ஆவினுக்கு 10 லட்சம் லிட்டர் வரை பால் வழங்குவது குறையும். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைபடும். அரசு தீர்வு காணவில்லை என்றால், எங்கள் பாலை  தனியார் நிறுவனத்துக்கு மடைமாற்றிவிடுவோம். தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விலையில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.  கேரளாவில் ஒரு லிட்டர் பாலுக்கு 48 ரூபாய் 70 காசு வழங்கப்படுகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் ரூ.15 கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த கொள்முதல் விலைப்பட்டியலை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம். தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும். ” என்று கூறியிருந்தார்.