சென்னையில் செல்லப் பிராணிகள் உடலில் மைக்ரோசிப் பொருத்தம்
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப் செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது. நவம்பர் 23ம் தேதிக்குள் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் உரிமம் பெறாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் எளிதில் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் இன்று, நவம்பர் 16, மற்றும் 23ம் தேதிகளில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ்காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் சென்னை மாநகராட்சி செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் மற்றும் சோழிங்கநல்லூர் இனக்கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்களில் உரிமையாளர்கள் தங்களது செல்லப்பிராணிகளை அழைத்து வந்து தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப்களை பொறுத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் உரிமம் பெறுவது கட்டாயம் என்பதால் இந்த சிறப்பு முகாம்களையும், 6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களையும் முழுமையாக பயன்படுத்தி கொண்டு தங்கள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று அபராதம் செலுத்துவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

