எம்ஜிஆருக்கு ரூ.3 கோடி செலவில் கோயில்..!

 
1

நடிகரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆருக்கு காட்பாடியில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது.

காட்பாடி அருகில் உள்ள கரசமங்கலம் கிராமத்தில் மும்மத அடையாளங்களுடன் இந்தக் கோவிலை எம்ஜிஆரின் தீவிர தொண்டரான டி.ஆர்.முரளி கட்டியுள்ளார்.‘தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் முருகப்பெருமான் வேடத்தில் நடித்திருப்பார்.

அத்தோற்றத்தை உடைய, ஏறக்குறைய 5 அடி உயரச் சிலை இக்கோவிலுக்காக அமைக்கப்பட்டுள்ளது.கோவிலின் முன்பகுதியில் எம்ஜிஆர் மூன்று மதங்களுக்கும் உரியவர் என்பதைச் சித்திரிக்கும் வகையில், மற்றொரு சிலை வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டியுள்ளார். அதற்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கலசங்களை வைத்து, வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ராஜகோபுரம் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் குவிந்திருந்த எம்ஜிஆரின் தொண்டர்கள் ''வாழ்க டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்'' என முழக்கமிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை முன்னாள் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மனிதன் என்பவர் தெய்வமாகலாம்" என்ற வரிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் எம்ஜிஆர். தனது வாழ்க்கையை சமூகத்திற்காக அர்ப்பணித்த அவருக்கு, திருநின்றவூரில் கோயில் கட்டி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.​

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரகுபதியின் மகன் எம்.ஜி.ஆர் மீதான அதீத பற்றின் காரணமாக அவருக்கு கோயில் கட்டியுள்ளார். ''ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்'' என்ற பாடலுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய எம்.ஜி.ஆரின் அருளாசி பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த ஆலயம் அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும்.​

எம்.ஜி.ஆர் திரையுலகின் வாயிலாக நற்பண்புகளை மக்களிடையே விதைத்தார்.​ அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்தாலும், இன்றும் சமூகத்திற்காக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.​ அவரைப் பின்பற்றும் எவரும் வாழ்வில் முன்னேற முடியும் என்பதற்கு அவரே சிறந்த உதாரணம்.​ எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் தொடங்கப்பட்ட 'மனிதநேயம் இலவச ஐஏஎஸ் கல்வி அறக்கட்டளை' மூலம் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு பைசா கூட செலவின்றி பயிற்சி பெற்று உயர் பதவிகளில் அமர்ந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்துள்ள எம்.ஜி.ஆர் பக்தர்கள், இந்த ஆலயத்தில் தங்களது ஆராதனைகளை செலுத்தினர்'' என்று தெரிவித்தார்.