தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி... NDA குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

 
1

அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் அதற்குள் கூட்டணியை முடிவு செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதே எடப்பாடி பழனிசாமி தான் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக கூறியிருந்தார்.

ஆனால் தற்போதைய அரசியல் சூழலை வைத்து மீண்டும் கைகோர்த்திருக்கிறார். இந்த கூட்டணி பிரிவதற்கான காரணங்களில் ஒன்றான அண்ணாமலை மாற்றம் என்பதை உறுதி செய்த பின்னரே, இணக்கமான சூழல் அமைந்ததா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இந்த கூட்டணியை அதிமுக தொண்டர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? களப்பணி ஆற்றப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் களத்தில் கைகோர்த்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டால் தான் திமுகவிற்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்ய பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஒருவேளை அதிமுக தொண்டர்களை படிப்படியாக சமாதானம் செய்வதற்காக தான் ஓராண்டிற்கு முன்னரே கூட்டணி இறுதி செய்யப்பட்டதா? என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடும்பத்தில் அதிமுக இணைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கூட்டணியின் மூலம் தமிழகம் புதிய உயரங்களை எட்டுவதற்கு விடாமுயற்சியுடன் பாடுபடுவோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் ஓர் ஆட்சியை அமைப்போம்.

தமிழகம் சீரான வளர்ச்சியை நோக்கி நகர, தமிழகத்தின் தனித்துவமான கலாச்சாரத்தை பாதுகாக்க தற்போதைய ஊழல் நிறைந்த, பிளவுவாத சக்தியாக இருக்கும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறிய வேண்டும். அதை எங்களது கூட்டணி நிச்சயம் செய்யும் என்று பதிவிட்டுள்ளார். அதாவது, 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.