முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை.. நீர் திறப்பும் அதிகரிப்பு..

 
 மேட்டூர் அணை !


கர்நாடக  இரு அணைகளும் நிரம்பி அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1,53,091 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.  

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து , கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் கே.எஸ்.ஆர் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபிணி அணை இரண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.  ஆகையால் இரு அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.   

மேட்டூர் அணை

கே.எஸ்.ஆர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,17,00 கன அடியாக உள்ளது. இதேபோல் கபிணி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,867 கனடியாக உள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு  1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீரும்,  கபினி அணையிலிருந்து வினாடிக்கு 35,000 கன அடி நீரும் என  2 அணைகளில் இருந்து 1,65,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.   

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,53,091கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி 116.36 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் டெல்டா பாசனத்திற்காக மற்றும் ஆடிப்பெருக்கு விழா விற்காகவும்  வினாடிக்கு 12000 கன அடி  நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது நீர் திறப்பு 16,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அணையின் நீர் இருப்பு 87.784  டிஎம்சியாக உள்ளது.