43-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

91 ஆண்டு கால வரலாற்றில் 43-வது முறையாக முழு கொள்ளவான 120 அடியை மேட்டூர் அணை தாண்டியது.
காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவான 120 அடியை தாண்டியது. தென் மேற்கு பருவ மழையின் காரணமாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் கர்நாடக அணைகளான கபினி , கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால், அங்கிருந்து அதிக அளவு உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 16-ந்தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
அன்றைய தினம் 43 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த 27-ந்தேதி 100 அடியை 71வது முறையாக எட்டியது. இதனையடுத்து 28-ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி 91-வது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் திருமதி. பிருந்தாதேவி கால்வாய் பாசனத்திற்காக தண்ணீரை விடுவித்தார்.
இந்நிலையில் மாலை 6 மணி அளவில் மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து அணையின் இடது கரையில் 16 கண் மதகு பாலம் அருகே நீர்வளத்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் செய்து காவிரி அன்னையை வழிபட்டு , பின்னர் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, மேட்டூர் அணையின் உபரி நீர் 16 மதகுகள் மூலம் கதவணைகளை திறந்து தண்ணீரை வெளியேற்றினர். உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரிக் கரையெங்கும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. டெல்டா பாசன விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக 16 கண் மதகு வழியாக 6 மணி அளவில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 7 மணி அளவில் 46 கன அடி தண்ணீரும், பின்னர் 8 மணி அளவில் 66 ஆயிரம் கன அடி தண்ணீரும் , பின்னர் பத்து மணி அளவில் 81 ஆயிரத்து 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட உள்ளது இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் வரத்தை அப்படியே வெளியேற்ற நீர்வளத் துறை பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.