மாதவரம் - மூலக்கடை இடையே மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு..!

 
1

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ திட்டத்தின் 2 வது கட்டத்தில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது .

இந்தப் பணிக்காக மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சேர்வராயன் என்று பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை ரயில் நிலையத்தில் இருந்து மூலக்கடை ரயில் நிலையம் வரை கீழ்வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியது. மொத்தம் 824.6 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம் வந்தடைந்தது. இது டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஒன்பதாவது சுரங்கம் தோண்டும் பணியாகும்.

ஒட்டுமொத்தமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தில், இதுவரை 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், தங்கள் பணி இலக்குகளை, அதாவது சுரங்கம் தோண்டும் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளன.

மாதவரம் நெடுஞ்சாலை முதல் மூலக்கடை வரையிலான சுரங்கப்பாதை பகுதி பல்வேறு சவால்கள் நிறைந்த மிகக் கடினமான பகுதியாக இருந்தது. அதாவது, பக்கிங்ஹாம் கால்வாய்க்கு அடியிலும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு அடியிலும் 14-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைக் கடந்தும் சுரங்கம் அமைக்கும் பணியை சேர்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் முடித்துள்ளது.

பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையிலும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும் அவர்களுக்கு ஏற்பாடு செய்து தரப்பட்டு இந்தச் சவாலான பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச நில அதிர்வு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. இப்பணி நடைபெற்ற காலம் முழுவதும் விரிவான கண்காணிப்பு கருவிகள் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதிசெய்யப்பட்டது.

சுரங்கம் தோண்டும் பணி முடிவடைந்த பிறகு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.