"சென்னையில் இன்றும் நாளையும் வெளுத்து வாங்கும் மழை!" – வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை!

 
1

சென்னையில் (அக்.20), நாளை (அக்.21) ஆகிய இரண்டு நாட்களில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புயல் மேகங்கள் நிலப்பரப்பை நோக்கி நகர்வதில் சிரமங்களைச் சந்தித்து, கடற்கரைக்கு அப்பாலேயே வலுவிழந்து வருகின்றன. இந்த வளிமண்டல சுழற்சியானது, அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடா வரை ஒரு நீண்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் ஒரு பகுதியாக மாறி, இரண்டு நாட்களுக்குப் பிறகு அரபிக்கடலை நோக்கி நகரும்.

இந்தச் சூழலால் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, தென்தமிழகம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில், இரு திசைகளிலிருந்தும் ஈரப்பதம் ஈர்க்கப்படுவதால் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, அக்டோபர் 20-21 மற்றும் 21-22 ஆகிய தேதிகளில், இரவு முதல் காலை வரையிலான நேரங்களில் நல்ல மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் (KTCC), வானம் ஓரளவு தெளிவாக இருக்கும். அவ்வப்போது சில இடங்களில் திடீர் மழை பெய்யலாம். ஆனால் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. எனவே, மழையைப் பற்றிய அச்சமின்றி விடுமுறை நாட்களை மகிழ்வுடன் கழிக்கலாம், இருப்பினும் சில இடங்களில் திடீர் மழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில், மழை மேகங்கள் ஒன்றிணையும் பாதையில் இருப்பதால், இங்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர் மற்றும் அதன் உட்புறப் பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உள்மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், அரியலூர், திருச்சி, நாமக்கல் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

மேற்கு தமிழகத்தில், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் தீவிரமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழகத்தைப் பொறுத்தவரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.

மழை பெய்ய வாய்ப்பு: இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் இரவு 1 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.