"கொள்ளை சம்பவத்தில் மீனாட்சிக்கு தொடர்பு இல்லை"- நிஷாந்த்
நகை கொள்ளை சம்பவத்திற்கும் மீனாட்சிக்கும், எனது தந்தைக்கும் தொடர்பு இல்லை என கைதான நிஷாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தடயங்களை அழித்துவிட்டுத் தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறையின் 9 தனிப்படைகள் களமிறங்கின. பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்களின் உதவியுடன் கொள்ளையில் தொடர்புடைய நிஷாந்த், அவருடைய காதலி யூடியூபர் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நகை கொள்ளை சம்பவத்திற்கும் மீனாட்சிக்கும், எனது தந்தைக்கும் தொடர்பு இல்லை என கைதான நிஷாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். உடனே நீதிபதி கொள்ளை வழக்கில் யாருக்கு தொடர்பு என இப்போது பேசக்கூடாது, போலீஸ் கஸ்டடி குறித்த மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடைபெறுகிறது எனக் கூறினார். அப்போது காவல்துறை தரப்பில், நிஷாந்த் சுயநினைவுடன் பலநாட்கள் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை செய்துள்ளார். மதுரை நகை கொள்ளை முக்கியமான வழக்கு, கஸ்டடியில் கட்டாயம் விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

