மீனாட்சி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்- சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் செப்.17- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருக்கோயிலுக்கு வருகைத் தருவார்கள் என்பதால் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் செப்.16- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கும், மறுமார்க்கத்தில், செப்.17- ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06153/06154) இயக்கப்படுகின்றன. மாலை 04.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 04.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தைச் சென்றடையும். பிற்பகல் 03.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 03.30 மணிக்கு சென்னை சென்ட்ரலைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்கள் நின்றுச் செல்லும்.
வரும் செப்.16- ஆம் தேதி அன்று காலை 10.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா மெமு ரயில் (06161), இரவு 11.30 மணிக்கு மானாமதுரையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், செப்.17- ஆம் தேதி அன்று மதியம் 12.00 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா மெமு ரயில் (06162), இரவு 11.45 மணிக்கு சென்னை தாம்பரத்தைச் சென்றடையும். இந்த மெமு சிறப்பு ரயில்கள், 12 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
தென்மாவட்ட பக்தர்களின் தேவையைப் பூர்த்திச் செய்ய ஏதுவாக சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு அதிவிரைவு சிறப்பு ரயிலும் (06157), சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் (06153) இயக்கப்பட உள்ளன.

