"மீனாட்சி அம்மன் சிலை பரிசு!" -முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்துப் பேசிய தயாரிப்பாளர் அன்பு செழியன்!
மதுரையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், முதலமைச்சர் விஜயை சினிமா பைனான்சியர் அன்பு செழியன் நேரில் சந்தித்தார். மேலும், விஜய்க்கு மீனாட்சி அம்மன் சிலையை பரிசாக கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகவும், அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் தரிசனம் செய்வதற்காகவும் முதலமைச்சர் விஜய் இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை' முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, சினிமா தயாரிப்பாளரும் பிரபல நிதி நிறுவன அதிபருமான அன்பு செழியன், முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது, மதுரையின் அடையாளமும் ஆன்மீகச் சிறப்புமிக்கதுமான மீனாட்சி அம்மன் சிலையை முதலமைச்சர் விஜய்க்கு அன்பு செழியன் பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நினைவுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மதுரை பயணத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் அரசு அதிகாரிகளும் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அன்பு செழியனின் இந்தச் சந்திப்பு மற்றும் பரிசு அளிப்பு நிகழ்வு குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

