5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை! ராகிங் கலாச்சாரத்தால் நேர்ந்த சோகம்

 
suicide

திருவள்ளூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த மாணவர் 5-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் 4 மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தவர் ஆஷர் (வ/20). இவர் தூத்துக்குடியை  சேர்ந்தவர். கல்லுரி விடுதியில் தங்கி பயின்று வந்த நிலையில்  5-வது மாடியில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாணவனை உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில், ஆபத்தான நிலையில் இருப்பதால் போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் ஆஷர் உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பின்னர் இது தொடர்பாக திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 4 மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த  மாணவன் சீனியர் வகுப்பு மாணவன் பெயரை போலியான ஐடி உருவாக்கி கல்லூரி நிர்வாகம் நடத்திய, ஜூம் மீட்டிங்கில் பங்கேற்று அதில் ஆபாசமான வார்த்தைகளை மெசேஜ் மூலம் பதிவிட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பின்னர் கல்லூரி நிர்வாகம் தரப்பில் கண்டுபிடிக்கப்பட்டு அந்த மாணவனை நிர்வாகம் கண்டித்ததாகவும், இதனால் அந்த சீனியர் மாணவன் தன் நண்பர்களுடன் இணைந்து  அவரை கண்டித்து தாக்கியதாகவும், இதனால்  மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. நான்கு மாணவர்களிடமும்  முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு அல்லது உயிரிழந்த மாணவனின் செல் போன் லேப்டாப் ஆய்வு செய்த பின்னர் எதற்காக மாணவன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரிய வரும் என போலீஸ்காரர்கள் தெரிவித்துள்ளனர். தொடக்கத்தில் மாணவனின் சடலத்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்த பெற்றோர்கள், பின்னர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து தனது மகனின் சாவுக்கு காரணமானவர் மீது முழுமையாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதால் போலீசார் உறுதி அளித்ததின் பேரில் அவர் சடலத்தை பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டனர்.