ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அரசின் மருத்துவக் காப்பீடு
குழந்தைகள் நல மையங்களில் தங்கி உள்ள ஆதரவற்ற ( non orphan children) குழந்தைகளை, வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை இல்லாமல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 1.48 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் குடும்ப அட்டை வருமானச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து இதில் இணையலாம். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2503 வகையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இவைதவிர கல்லீரல், சிறுநீரகம், இதயம், கணையம், எலும்பு, எலும்பு மஜ்ஜை, விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட 8 வகையான உயர் அறுவை சிகிச்சைகளும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல மையங்களில் தங்கி உள்ள ஆதரவற்ற ( non orphan children) குழந்தைகளை, வருமானச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என்று பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். இதை பரிசீலனை செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, குழந்தைகள் நல மையங்களில் தங்கி உள்ள ஆதரவற்ற ( non orphan children) குழந்தைகளை, வருமானச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை இல்லாமல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் அந்த மையங்களில் தங்கி இருக்கும் வரை இந்த காப்பீட்டு திட்டம் அவர்களுக்கு அளிக்கப்படும் என்றும், இரட்டை பதிவுகளை தவிர்க்க ஆதார் எண் மற்றும் கட்டாயம் என்றும் இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை காரணமாக 843 குழந்தைகள் நல மையங்களில் தங்கி உள்ள 15,092 குழந்தைகள் பயன் பெறுவார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


