காலையில் ஒரு அறிவிப்பு! மாலையில் மறு அறிவிப்பு!! திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனையா?
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அபிஷேக தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அபிஷேக தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விளக்கம்.
அபிஷேக தரிசனத்தின்போது பக்தர்கள் சுவாமி சன்னதியில் சுமார் ஒரு மணி நேரமும், அம்மன் சன்னதியில் சுமார் 30 நிமிடங்களும் அமர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக வயது முதிர்ந்த பக்தர்கள் மற்றும் இதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ள பக்தர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படாமல் தடுக்கும் வகையில், அபிஷேக தரிசனத்திற்கு செல்லும் முன்பாக தேவையானவர்களுக்கு ORS பானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படும் சூழ்நிலையில், தேவைக்கேற்ப அவர்களை மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அபிஷேக தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை கட்டாயம் என வெளியிடப்பட்டுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. மருத்துவப் பரிசோதனை கட்டாயப்படுத்தப்படவில்லை.
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, தேவைப்படும் பக்தர்களுக்கு மட்டும் மருத்துவப் பரிசோதனை, ORS பானம் மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

