ராகிங் கொடுமையால் மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

 
1

குஜராத்தில் ஜி.எம்.இ.ஆர்.எஸ். என்ற பெயரில் மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அனில் மெதானியா (வயது 18) என்பவர் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்காக சேர்ந்து இருக்கிறார். இந்நிலையில், கல்லூரியின் விடுதியில் உள்ள 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் முதலாம் ஆண்டு மாணவர்களை அழைத்து ராகிங்கில் ஈடுபட்டு உள்ளனர்.

கல்வி வளாகங்களில் மாணவர்கள் அறிமுகம் என்ற பெயரில் நடைபெறும் இதுபோன்ற ராகிங் நடவடிக்கைகளில், புதிதாக படிக்க வரும் மாணவர்களிடம் மூத்த மாணவர்கள் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், ராகிங்கின் ஒரு பகுதியாக அனிலை 3 மணிநேரம் ஒரே இடத்தில் நிற்கும்படி அவர்கள் கூறியுள்ளனர். இதில், மயக்கமடைந்த அனில், சுயநினைவை இழந்து கீழே சரிந்துள்ளார்.


இதன்பின்பு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அனிலிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இதில், 3 மணிநேரம் அந்த மாணவரை நிற்க செய்துள்ளனர் என போலீசிடம் அவர் கூறியுள்ளார். இதன்பின்னர் அவர் உடனே உயிரிழந்து விட்டார். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை வெளிவந்த பின்னரே மரணத்திற்கான காரணம் பற்றி தெரிய வரும்.

கல்வி வளாகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மையங்களில் எந்த வடிவிலான ராகிங்கும் கூடாது என அதற்கு பல்கலைக்கழக மானிய குழு தடை விதித்து உள்ளது. ராகிங்கில் ஈடுபடுபவர்கள் அல்லது ராகிங்கை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளது.