பா.ஜ.க, மோடி முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டது- வைகோ
தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைத்து கொண்டு வரப்பட்டதால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் தோல்வி அடைந்த நிலையில், பா.ஜ.க, நரேந்திர மோடி முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைத்து கொண்டு வரப்பட்டதால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் தோல்வி அடைந்தது. மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா (2026) மீது வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது. மசோதா வெற்றி பெற தேவையான 326 வாக்குகளுக்கு பதில் 278 பேரும், எதிராக 211 பேரும் வாக்களித்தனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற முடியாததால் மசோதா மீதான வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க, நரேந்திர மோடி முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டது, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை வஞ்சிக்கும் நஞ்சு மனப்பான்மையோடும், தீய குறிக்கோளோடும் நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. தி.மு.கழகத்தின் தலைவர் - தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் உயர்த்திய போர்க்கொடி வெற்றிக் கொடி ஆகிவிட்டது. பா.ஜ.க. அரசின் கோர முயற்சிகளுக்கு மரண அடி விழுந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


