“ஈழ பிரச்சனைகளிலும் வைகோ உண்மையாக இல்லை”- திமுகவில் இணைந்த மதிமுகவினர்

 
திமுகவில் இணைந்த மதிமுகவினர்

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறிய நிலையில் மதிமுக முன்னாள் மாநில நிர்வாகிகள் அழுகுசுந்தரம், புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,  மதிமுக முன்னாள் மாநில நிர்வாகிகளான அழகுசுந்தரம், புலவர் செவந்தியப்பன் (இருவரும் பொடா சட்டத்தில் வைகோவுடன் சிறையில் இருந்தவர்கள்), டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மற்றும் ஆதரவாளர்கள் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறிய நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஆர்.செங்குட்டுவன், “தமிழ்நாட்டில் ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் கட்சியாகவும், முன்னோடி தலைவராகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். திமுக இன்று தோற்று இருக்கலாம். ஆனாலும் மக்களுக்காக எப்போதும் திமுக களத்தில் நிற்கும்” என்றார். தொடர்ந்து பேசிய செவந்தியப்பன், “எதற்கு நமக்கு தனியாக கட்சி திமுகவுடன் மதிமுக கட்சியை இணைந்துவிடலாம் என கூறியதற்கு தன்னை கட்சியில் இருந்து வைகோ நீக்கினார். திமுக கூட்டணியில் இருந்துகொண்டு திமுகவை காப்பாற்ற எப்போதும் வைகோ தயாராக இல்லை. ஈழ பிரச்சனைகளிலும் வைகோ உண்மையாக இல்லை. வருங்காலத்தில் திமுகவை வலுப்படுத்த வேண்டும் என மதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ளோம்” என்றார்