தவெக அரசின் 4 மாத ஆட்சியை விமர்சித்த மேயர் பிரியா! அடுக்கிய விமர்சனங்கள்..!

 
1

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, தமிழகத்தின் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாகச் சூழல் குறித்துக் காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.


தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக மேயர் பிரியா குற்றம்சாட்டினார்.தொடர்ந்து நிகழும் மின்வெட்டு, மின்கட்டண உயர்வு மற்றும் ஆவின் பால் தட்டுப்பாடு ஆகியவற்றால் பொதுமக்கள் அன்றாடம் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.மக்கள் நலன் சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக மாமன்றக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

சென்னை மேயர் பிரியா தனது உரையில், தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களில் மாநிலம் முழுவதும் ஏகப்பட்ட பிரச்சினைகள், குற்றச் சம்பவங்கள், கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், ஏழை, எளிய மக்கள் பாதிப்பு, விலைவாசி உயர்வு, ஆவின் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மின் வெட்டு பிரச்சினைகள் வீடுகள், கடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதுபற்றி அமைச்சர்களிடம் கேள்வி கேட்டால் காற்று அடிக்கவில்லை, மழை பெய்யவில்லை என்று பதிலளிக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.


சென்னை மாநகருக்கு ஐடி பூங்காக்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதுபோல நகரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என நம்பியிருந்த பரந்தூர் விமான் நிலைய திட்டத்தை கைவிட்டுள்ளனர். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால், இருப்பதும் போய்விடும்.

சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுபோல் எண்ணற்ற நடவடிக்கைகளை தமிழகத்திற்கு எதிராக தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்றால் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் நடிகர் குறிப்பிட்டது போல், தலைவர் என்றால் என்னவென்றே தெரியாமல் தலைமையின் பொறுப்பை உணராமல் வாக்குறுதியை அள்ளி கொடுத்து விட்டு, பிரச்சினைகள் வரும் போது எதிரணியின் மீது பழியை போடுவது தலைமை பண்பிற்கான தகுதி கிடையாது. அது ஏமாற்று வேலை என்று தெரிவித்தார். அதுதான் இன்றைய உண்மை நிலையும் கூட. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்தில் இருந்தாலும் கொள்கையில் உறுதியாக நிற்கும். தொடர்ந்து போராடி தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளனர். திமுகவின் தேவை தமிழகத்திற்கு எப்போதும் தேவை என்று மேயர் பிரியா வாசித்தார்.

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதை சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். ஆட்சி கட்டிலில் இல்லாத போது சிறப்பான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்ற கூறப்படுவதுண்டு. ஆனால் தற்போதைய அரசியல் சூழல் என்பது கொள்கை ரீதியான விமர்சனங்கள், மக்கள் பிரச்சினைகள், உரிமைகள் சார்ந்த மோதல்கள் என்ற நிலையை தாண்டி தனிமனித தாக்குதல்களாக மாறிவிட்டன. அந்த விஷயத்தில் சற்று கவனமாக செயல்பட வேண்டிய மாண்பு அனைத்து தரப்பினருக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.